மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆனால், அதை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என சினிமா தரப்பினர் பலரும் கோரிக்கை வைத்தனர். மேலும், சீமான், பாரதிராஜா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்கள் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். மேலும், போட்டி நடைபெற்ற போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மைதானத்திற்குள் செருப்பை வீசினர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்ப, சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும், கல்கத்தா, புனே உள்ளிட்ட ஆகிய மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது. இதனால், சென்னையில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் சினிமா துறையினர் நடத்தி வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து நாளை முதல் வழக்கம் போல் புதிய படங்கள் வெளியாகும், படப்பிடிப்புகள் தொடங்கும் என விஷால் அறிவித்துள்ளார்.
இதைக்கண்டு கொதிப்படைந்த கிரிக்கெட் ரசிகர்கள், ஸ்கோரா, சோறா என எங்களை கேட்டனர். தற்போது சினிமாவை மட்டும் நாங்கள் ஏன் பார்க்க வேண்டும்? நாங்கள் அதையும் புறக்கணிக்கிறோம் என கிளம்பியுள்ளனர். அதேபோல், புதிய படங்கள் வெளியானால், காவிரி நீர் தொடர்பான போராட்டம் நீர்த்துப்போகும். எனவே, சினிமாவா? விவசாயமா? என முடிவு செய்யுங்கள் என மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். அதற்காக #NoCauveryNoCinema என்கிற ஹேஸ்டேக்கை அவர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.