கை விரித்த அரசு? டிடிவி தினகரன் வேதனை!!

வியாழன், 7 மே 2020 (10:30 IST)
கொரோனா பாதிப்பு உள்ளவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதை டிடிவி தினகரன் கண்டித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாமலே பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலே கொரோனா பாதிப்பு உள்ளவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரும் அவரை கவனித்து கொள்பவரும் ஜிங்க் 20 எம்ஜி, விட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிலவேம்பு, கபசுரகுடிநீரை 10 நாட்களுக்கு பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இதற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 4000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
 
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ? என்ற பீதியை  மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்