ஊரடங்கு முடிந்து 50% பேருந்துகள் இயங்கும்! – போக்குவரத்து துறை சுற்றறிக்கை!

வியாழன், 7 மே 2020 (09:42 IST)
தமிழகம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 17 உடன் ஊரடங்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்தில் பயணிகள் ஆறு அடி இடைவெளி பேண வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை பேருந்துகளில் அனுமதிக்க கூடாது. பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்க கூடாது. இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும் போன்ற விதிமுறைகளும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்