திமுக எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ஐ விமர்சித்து சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அது அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் இடையே கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆ ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதிவிட்டுள்ளார்.