பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் மிரட்டுவதாக போலீசில் புகார்!

வியாழன், 25 மே 2023 (12:40 IST)
பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அண்ணாதுரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் தன்னை சிலர் மிரட்டுவதாக கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
 
கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதி சேர்ந்தவர் அண்ணாதுரை (47).  இவர் தற்போக்கு பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். இவர் பழைய சோறு டாட் காம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் வழங்கி வரும் நிலையில் தன்னை தொழில் செய்யாவிடாமல் தடுப்பதாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 
 
அவர் அளித்த மனுவில், சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் எனது பணிகளுக்காக கட்டடத்தை வாங்கினேன்.  எழுத்து பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.‌ கட்டடத்தை சீரமைக்க நான் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறேன்.  இதற்கிடையே பழனிச்சாமியின் மகள் பிருந்தா என்பவர் வாடகை கட்டடத்தில் இருக்கும் எனது கடை மற்றும் அலுவலகத்திற்கு வந்து அடிக்கடி தொந்தரவு செய்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தடுத்தல் மின் இணைப்பை துண்டித்தல் போன்ற செயல்பாடுகளை அவர் செய்து வந்தார்.  
 
அவர் நடவடிக்கையால் எனக்கு 15 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஆகிவிட்டது. பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில்  மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி மாவட்ட பொது செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் எனது அலுவலகத்திற்கு வந்தார்கள்.  அலுவலகத்தின் கதவு பூட்டுகளை உடைத்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்களை எடுத்து சென்று விட்டார்கள்.  
 
இது தொடர்பாக நான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார்கள்.‌ எனது கடை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை . நான் பயன்படுத்திய அலுவலகத்தை பாரதிய ஜனதா சேவா மையமாக மாற்ற திட்டமிட்டு அவர்கள் இது போன்ற செயல்களை செய்திருப்பதாக தெரிகிறது‌ .  உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஏதாவது இருந்தாலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசிக் கொள் என என்னை மிரட்டி வருகிறார்கள்.  
 
அண்ணாமலை, உத்தம ராமசாமி  மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சேவை மற்றும் மக்களை அணுகும் திட்டங்களை தாங்கள் செய்தது போல் காட்டிக்கொள்ள அண்ணாமலை தரப்பினர் இது  போன்ற  அடாவடி செயலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. நான் வெளிப்படையாக புகார் அளித்திருப்பதால் அவர்கள் என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்பார்கள். போலீசார் உரிய முறையில் இதனை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்