நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசு தடுப்பது முறையா?- அண்ணாமலை

திங்கள், 22 மே 2023 (17:50 IST)
பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் ஏகலைவா பள்ளியில் பயின்று சாதித்த தமிழக பழங்குடி மாணவர்கள். இதே போல, கிராமப்புற மாணவர்கள் சாதனை செய்ய உதவும் நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசு தடுப்பது முறையா?  என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பழங்குடியினருக்கான மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி திட்டத்தின் கீழ் பயின்ற 15 மாணவர்கள், மிகக் கடினமான தேர்வான. தொழில் நுட்பக் கல்விக்கான ஆரம்பநிலை கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) வெற்றி பெற்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். போக்குவரத்து இல்லாத தொலைதூர மலை கிராமப் பகுதிகளில் மாணவர்களுக்கு, இது மிகுந்த ஊக்கமளிக்கும் செய்தியாகும்.

வசதிகள் சரிவர வசிக்கும் பல ஆண்டு காலமாக, போதிய வசதிகள் கிடைக்காமல் உயர் கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளித் திட்டம் ஒரு வரப் பிரசாதம் என்றால் அது மிகையாகாது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இந்தத் திட்டத்தின் மூலம் இன்னும் பலர் பயனடைய வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழ் மொழித் தேர்வில் 36000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. கல்வித் திட்டத்தின் தரமும் கற்பித்தல் தரமும் குறைந்திருப்பதையே இது காட்டுகிறது. தமிழில் இத்தனை மாணவர்கள் தோல்வியடைவது, எதிர்காலத்தில் மாணவர்கள், தமிழ் பாடத்தைத் தேர்வு செய்யாமல் புறக்கணிக்கும் நிலை ஏற்படும். தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் அமல்படுத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறது இந்த திறனற்ற திமுக அரசு.

தமிழகக் கல்வித் துறை பாடத் திட்டங்களின் தரத்தையும், கற்பித்தல் தரத்தையும் உயர்த்த வேண்டிய அதே நேரத்தில், நாடெங்கும் உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டிய அவசியமும் தெளிவாகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப் புற மாணவர்களுக்கு 75% இடங்கள் மற்றும் மாணவிகளுக்கு 33% இடங்கள் என, சமூக நீதியை நடைமுறைப் படுத்தியிருக்கும் நவோதயா பள்ளிகள், ஒன்பதாம் வகுப்பு வரை எந்த கல்விக் கட்டணமும் இன்றி செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக,பள்ளிகளை நவோதயா கிராமப்புற அனுமதிக்காமல் ஏழை எளிய மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகளைத் தடுப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே. மாநில அரசின் கல்வித் தரத்தையும் கற்பித்தல் தரத்தையும் உயர்த்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதமான நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.


 

பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் ஏகலைவா பள்ளியில் பயின்று சாதித்த தமிழக பழங்குடி மாணவர்கள். இதே போல, கிராமப்புற மாணவர்கள் சாதனை செய்ய உதவும் நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசு தடுப்பது முறையா?

அறிக்கை: https://t.co/aBy6rWVxcs

— K.Annamalai (@annamalai_k) May 22, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்