காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜுலை 1 முதல் அத்திவரதர், தன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சித் தரும் அத்திவரதர், வருகிற ஆகஸ்டு 17 ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் செல்கிறார்.
இதனிடையே ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர், தன் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். இது குறித்த பணிகளுக்காக ஜூலை 31 ஆம் தேதி அரை நாள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
நின்ற கோலத்தில் காட்சித் தரவிருக்கும் அத்திவரதரை காண ஏராளமான பக்தர்களை வருவார்கள் என்பதால், வாகனம் நிறுத்துமிடம் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், கோயில் வளாகத்தைச் சுற்றி சில இடங்களில் பக்தர்களை நிறுத்தி வைத்து தரிசனத்திற்கு அனுமதிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.