கடந்த 21 ஆம் தேதி, மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், 288 தொகுதியில் 161 இடங்களை கைப்பற்றி பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.
164 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 105 இடங்களிலும், 124 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு தற்போது யார் முதல்வர் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக தேவேந்திர பட்னாவிஸே முதல்வர் என்று தேர்தலுக்கு முன்பு பாஜக அறிவித்திருந்தது.
ஆனால் முதல் மந்திரி பதவியை ஆதித்யா தாக்கரேவுக்கும் பிரித்து தரவேண்டும், அதாவது இரு கட்சிகளும் தலா 2 ½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பாஜகவினர் தயாராக இல்லை என கூறப்படுகிறது. மேலும் 2 ½ ஆண்டுகள் ஆட்சியை பகிர்ந்துகொள்தல் என்பது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். இது குறித்து உத்தவ் தாக்கரேவுடன் பாஜகவினர் கலாந்தாலோசிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.