முதல்வர் பன்னீர்செல்வத்திடம் வீழ்ந்தார் சசிகலா: பனிப்போர் ஆரம்பம்!

வெள்ளி, 23 டிசம்பர் 2016 (08:55 IST)
நேற்று முன்தினம் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீடு மற்றும் அவரது தலைமைச் செயலக அறை, அவரது மகன் வீடு போன்றவற்றில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.


 
 
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த சோதனை சசிகலா மற்றும் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனை என அரசியல் கட்சிகளின் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
 
முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று வந்த மறுநாளே இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் போயஸ் கார்டனில் இருந்து முதல்வருக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதனையடுத்து இரவு 10 மணிக்கு போயஸ் கார்டன் சென்ற பன்னீர்செல்வம் அதிகாலை 4 மணி வரை சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
இந்த சந்திப்பின் போது புதிய தலைமைச் செயலாளரை நியமிப்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக பேசப்படுகிறது. சசிகலா தரப்பில் இருந்து சிலரை பரிந்துரைத்துள்ளனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் அதனை ஏற்க மறுத்துவிட்டு பாஜக மற்றும் அதிமுகவினரால் ஏற்றுக் கொள்ளும் கிரிஜா வைத்தியநாதனை தேர்வு செய்தார் பன்னீர்செல்வம் என்று கூறப்படுகிறது.
 
புதிய தலைமைச் செயலாளர் நியமனத்தில் தன்னுடைய பேச்சை பன்னீர்செல்வம் கேட்காதது கார்டன் தரப்புக்கு அதிர்ச்சியாக உள்ளதாம். தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் சுறுசுறுப்பாக செயல்படுவது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் உருவாகி இருப்பதை கார்டன் தரப்பு ரசிக்கவில்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்