விஜயபாஸ்கரை தூக்கியடித்த எடப்பாடி பழனிச்சாமி: மோதல் உச்சக்கட்டம்!

வியாழன், 29 ஜூன் 2017 (17:18 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துள்ள இருந்த ஒரு அரசு விழாவில் கடைசி நேரத்தில் அவரை நீக்கி விட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் இருந்து ஊடக வெளிச்சத்தில் அதிகம் வராமல் சற்று ஒதுங்கியே உள்ளார் அவர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் விஜயபாஸ்கரை மேலும் புறக்கணிப்பது போன்ற தகவல்கள் வருகின்றன.
 
கடந்த 13-ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை அரசு பொது மருத்துவமனையில், காது கேட்காத குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முகம் கொடுத்து பேசவே இல்லை.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் விஜயபாஸ்கரை புறக்கணிப்பது அந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே உள்ள மோதல் மீண்டு வெளிப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இதற்கு காரணம் அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்கிவிட்டு அவர் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். அரசு மருத்துவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை அரசு பல்நோக்கு மருத்துவமமனை வளாகத்தில் நடந்தது.
 
இந்த நிகழ்ச்சியில் தேர்வான மருத்துவர்களுக்கான பணி ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்குவதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று விஜயபாஸ்கர் மீது எழுந்த குட்கா லஞ்சம் குற்றச்சாட்டினால் கடைசி நேரத்தில் விஜயபாஸ்கரை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியே வழங்கினார்.
 
விஜயபாஸ்கர் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருப்பதால் தான் அவருடன் எடப்பாடி பழனிச்சாமி மோதல் போக்கை கடைபிடிக்கிறார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்