வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..சென்னை போலீஸார் முக்கிய அறிவிப்பு!!

புதன், 27 ஜூலை 2022 (08:41 IST)
போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சென்னை காவல் துறையினர் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் முன்எச்சரிக்கை.


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் சென்னை மாநகராட்சி காவல் துறையினர் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் முன்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம், சென்னை மாநில கல்லூரி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் சென்னையின் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, செண்ட்ரல் சதுக்கம், ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை ஆகிய வழிதடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு ஏற்ப பயண திட்டத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்வோர் முன்னதாகவே செல்லவும் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்