சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், 'மெரினா பாரம்பரிய வழித்தடத் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு காமராஜர் சாலை நடைபாதை மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளில், புதிதாக ஒன்பது பேருந்து நிறுத்தங்கள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பிரத்யேகப் பாதைகள் மற்றும் மூன்று புறநகர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாதைகள் தெருவிளக்குகளால் அழகுபடுத்தப்படும். மெரினா பகுதியில் எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், பொதுப்பணித்துறை கட்டிடம், பிரசிடென்சி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், குயின் மேரிஸ் கல்லூரி, டிஜிபி அலுவலகம் போன்ற பல பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இந்த திட்டம், மெரினாவின் அழகை மேம்படுத்துவதோடு, சென்னைக்கு ஒரு புதிய அடையாளத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.