உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு: சென்னை மேம்பாலங்கள் மூடல்
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (14:51 IST)
2020ம் ஆண்டு புத்தாண்டை உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்த புத்தாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சென்னையிலும் மக்கள் பலர் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றார்கள். சென்னை மெரீனவில் மக்கள் பலர் நள்ளிரவில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை சாலை பகுதிகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இந்நிலையில் அதிவேகமாக இளைஞர்கள் வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதும் நிகழ்வதால், இந்த புத்தாண்டில் அதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீஸார் ஆயத்தமாக உள்ளனர்.
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் மட்டும் 2500 போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுத்தப்பட இருப்பதாக காவல் கூடுதல் ஆணையர்கள் அருண் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
கடந்த முறை புத்தாண்டில் மேம்பாலங்களில் பலர் ரேஸ் போட்டிகள் நடத்தியதால் இன்றிரவு சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உட்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.