காதுல பிரச்சினை; தொண்டையில் ஆப்ரேஷன்! – பெற்றோர்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (13:59 IST)
சென்னையில் காதில் பிரச்சினை உள்ளதாக மருத்துவமனை சென்ற குழந்தைக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே அம்பத்தூரை சேர்ந்தவர் செல்வம். இவரது 9 வயது மகள் ராஜஸ்ரீ, அருகிலுள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் காதில் கம்மல் மாட்டும் இடத்தில் கட்டி இருப்பதால், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜஸ்ரீயை அழைத்து சென்றுள்ளனர். ராஜஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் காதில் உள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து சிறுமியின் தொண்டையில் கட்டு போடப்பட்டிருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜஸ்ரீ பெற்றோர் மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போதுதான் காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தது மருத்துவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து அவர்களை சமாதானம் செய்துள்ளனர். அவர்களை அழைத்து பேசிய மருத்துவமனை நிர்வாகம் இதை பெரிதுப்படுத்த வேண்டாமென்றும், இதனால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறி, நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்ததாதகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் முற்றுகையை கைவிட்டுள்ளனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்