சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் நாள்தோறும் குப்பைகளை மேலாண்மை செய்வதில் சென்னை மாநகராட்சி பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. சென்னையிலிருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது.
இந்நிலையில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என வீடுகளிலிருந்தே வகைப்படுத்தி பெற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகள் (உணவு, பழம், காய்கறி, இறைச்சி மீதங்கள் உள்ளிட்டவை) தனியாகவும், மக்காத குப்பைகள் (பிளாஸ்டிக் பைகள், நொறுக்கு தீனி பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், தெர்மகோல், இரும்பு, டயர், ட்யூப் உள்ளிட்டவை) தனியாகவும் பிரித்து குப்பை சேகரிக்க வரும் ஊழியரிடம் வழங்க வேண்டும்.
தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளான பேட்டரி, பூச்சி மருந்து டப்பாக்கள், காலாவதி மருந்துகள், உடைந்த பல்புகள், மின் பொருட்கள், பயன்படுத்திய ஊசி ஆகியவற்றை தனியாக ஒரு பையில் போட்டு வாரம் ஒருமுறை வழங்கப்பட வேண்டும்.
இந்த முறையை பின்பற்ற தவறுபவர்களுக்கு தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். அதிகமான குப்பை சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமும், தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் இந்த அபராதம் இரண்டு மடங்காகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.