சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்கள் இதுவரை செயல்பட்டு வந்தன.
தற்போது நிர்வாக எல்லைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, முந்தைய 15 மண்டலங்களில், மணலி மண்டலம் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களில் இணைக்கப்பட்டது.
அதன் மூலம் மண்டலங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்த நிலையில், தற்போது கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி-சோழிங்கநல்லூர் ஆகிய 6 புதிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால், சென்னை மாநகராட்சியின் மொத்த மண்டல எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்திருப்பதாலும், நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.