சென்னையில் விமானம் மூலம் வந்து, நகை பறிப்பில் ஈடுபட்டு மீண்டும் விமானம் மூலம் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
காவல் ஆணையர் அருண் கூறியதாவது: சென்னையில் 6 இடங்களில் செயின் பறித்து, மும்பைக்கு விமானம் மூலம் தப்பச் செல்ல திட்டமிட்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பியோடிய மற்றொருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் பிடித்தனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட, தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றபோது, அவர்கள் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டனர். அதிர்ஷ்டவசமாக, காவல்துறையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. காவல் வாகனம் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. தற்காப்புக்காக, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாஃபர் இரானி உயிரிழந்தார்.
மேலும், கைதான கொள்ளையர்களிடம் இருந்து 26 சவரன் மதிப்புள்ள ஆறு செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 34 செயின் பறிப்பு நடந்துள்ளது, அதில் 33 வழக்குகளை போலீசார் துப்பறிந்து விட்டனர். தனிப்படை போலீசார் தற்போது இந்த ஈரானிய கொள்ளையர்களை மேலும் விரைவாக பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னரும் இந்த கொள்ளையர்கள் உடைகளை மட்டுமே மாற்றி, காலணியை மாற்றவில்லை. அதனால்தான் அவர்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டதாகவும், காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.