சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது புகார் - ரூ.7 கோடி மோசடி

வியாழன், 1 ஜூன் 2017 (16:07 IST)
சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன்  மீது சென்னை காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


 

 
ஜெ.ஜெ. தொலைக்காட்சியில் நிர்வாகத்தில் இருந்த பாஸ்கரன் தலைவன், பாஸ் என்கிற இரண்டு படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு மேடையில் ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என பேசியதால், அவர் மீது கஞ்சா வழக்கு போட்டு சிறையில் தள்ளினார் ஜெயலலிதா. 
 
1995ம் ஆண்டில், ஜெயா தொலைக்காட்சிக்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக, ரிம்சாட் என்ற செயற்கைக் கோள் நிறுவனத்திற்கு 6.8 லட்சம் டாலர் பண பரிமாற்றம் செய்ததாக அந்நிய செலவாணி வழக்கில் இவரை அமலாக்கப்பிரிவினர் கைது செய்தது. அந்த வழக்குன் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதில் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் சிறைக்கு செல்வார் எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில், சென்னையை சேர்ந்த 18 பேர்,  தங்களுக்கு அரசு வேலை மற்றும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வாங்கித் தருவதாக கூறி ரூ.7 கோடி அளவிற்கு பாஸ்கரன் மோசடி செய்ததாக, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
இதற்கு முன் பலமுறை பாஸ்கரன் மீது மோசடி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதும், அதன் தொடர்ச்சியாக அவர் சிறைக்கு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்