நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியோடு சேர்ந்து களம் இறங்கிய தேமுதிக பயங்கரமான தோல்வியை சந்தித்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் எப்போது உடல் நலமின்றி போனாரோ அப்போதே தேமுதிகவும் சுணங்கிவிட்டது. அவரது மனைவி பிரேமலதா, மச்சான் எல் கே சுதீஷ் ஆகியோரின் பொறுப்பில் கட்சி வந்த பிறகு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தனது தொண்டர்கள், செல்வாக்கு என பலவற்றை இழந்த தேமுதிக, இப்போது மாநில கட்சி என்கிற அந்தஸ்தையும் இழக்க போகிறது. மாநில கட்சி என்கிற அந்தஸ்துக்கு சட்டசபையில் ஒரு இடமாவது பெற்றிருக்க வேண்டும் அல்லது வாக்கு சதவீதத்தில் கணிசமான புள்ளிகளை பெற்று தோல்வியடைந்திருக்கலாம். இதேபோல் தேசிய கட்சி என்கிற அங்கீகாரத்துக்கும் மக்களவையில் ஒரு உறுப்பினர் பதவியோ அல்லது கணிசமான வாக்கு சதவீதங்களோ தேவை. இந்நிலையில் தற்போது இவை இரண்டுமே இல்லாத இக்கட்டான சூழலில் நிற்கிறது தேமுதிக.
கட்சியை தொடங்கிய காலத்தில் 2006ல் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக பெரிய வெற்றிகளை பெறாவிட்டாலும் கட்சி தலைவர் விஜயாகந்த் போட்டியிட்ட விருதாச்சலம் தொகுதியில் வென்று மாநில கட்சி என்கிற அந்தஸ்துக்கு கொண்டு வந்தார். அதற்கு பிறகு 2009ல் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. வெற்றி பெற்றிருந்தால் தேசிய கட்சி அங்கீகாரத்துக்கு தேமுதிக வந்திருக்கும். அதற்கு பிறகு 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக வளர்ந்தது. இதற்கு பிறகுதான் கேப்டனின் முரசு இருள தொடங்கியது. சட்டசபையில் அதிமுகவினருடன் வாக்குவாதம், பத்திரிக்கையாளர்களோடு சண்டை என விஜயாகாந்த் கட்சி வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியோடு இணைந்து போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதி கூட வெற்றிபெறாமல் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பிரகு விஜயாகாந்த் உடல்நல குறைவால் கட்சி செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போக அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனன் எல் கே சுதீஷும் தற்போது கட்சியை நிர்வகித்து வருகிறார்கள். கேப்டன் மேல் இருந்த அன்பினால் திரண்டிருந்த தொண்டர்கள் அவர் இல்லாத இந்த தேர்தலில் மிகப்பெரிய ஆர்வத்தோடு செயல்படவில்லை.
தொடர்ந்து எந்த சட்டசபை, மக்களவை உறுப்பினர் பதவிகளோ, வாக்கு சதவீதத்தில் குறிப்பிட்ட புள்ளிகளோ பெறாத கட்சி மாநில கட்சி என்ற அடையாளத்தை இழப்பதுடன் அவர்களது சின்னமும் பறிக்கப்படும். அதற்கு பிறகு சுயேட்சை வேட்பாளர்கள் போல தேர்தல் ஆணையம் வழங்கும் தற்காலிக சின்னத்தை கொண்டே போட்டியிட முடியும். நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் போன்றோருக்கு கட்சி சின்னம் மாறி கொண்டிருப்பதற்கு இதுவே காரணம். சின்ன சின்ன கட்சிகளும் மாநில கட்சியாய் மாறுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக்கொண்ட இதே தமிழ்நாட்டில்தான் பல மாநில கட்சிகளும் தங்கள் அடையாளத்தை இழந்து அழிந்து வந்துள்ளது என்பது வரலாறு. இப்போது தேமுதிக மீண்டும் வளர்ந்து வருமா அல்லது வரலாறாகவே மாறிவிடுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.