ரத்து செய்யப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கி உத்தரவிட வேண்டும்- தினகரன்

சனி, 27 மே 2023 (20:26 IST)
மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கருத்துகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ‘’மதுரையில் ரூ.5.25 லட்சம் செலுத்தி வீட்டு மனை பட்டா வாங்கிய 38 பத்திரிகையாளர்களின் பட்டாவை மதுரை முன்னாள் ஆட்சியர் முன்தேதியிட்டு ரத்து செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது’’ என்று அமமுக தலைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மதுரையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வீட்டு மனை கேட்டு கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு மனு கொடுத்ததில் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டு மனை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 86 பத்திரிகையாளர்கள் தலா ரூ.5,25,816 செலுத்தி வீட்டு மனை பட்டா பெற்றனர். அதே நேரத்தில் இலவச வீட்டு மனை திட்டத்துக்கான நிபந்தனையைப் போல வீட்டு மனை பெறுவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் எந்தவித சொத்துகளும், 50 கி.மீ சுற்றளவில் இருக்கக் கூடாது என நிபந்தனையும் கடந்த பழனிசாமி ஆட்சியில் விதிக்கப்பட்டதால் பத்திரிகையாளர்களால் தாங்கள் வாங்கிய மனையில் வீடு கட்ட இயலவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த 2021ஆம் ஆண்டு முதலமைச்சரை சந்தித்த பத்திரிகையாளர்கள் இந்த நிபந்தனையை ரத்து செய்யும்படி முறையிட்டனர். அதனை பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்த நிலையில் 38 பத்திரிகையாளர்களின் பட்டாக்களை முன்னாள் ஆட்சியர் அனீஷ் சேகர் தனது பணிமாறுதல் ஆணைக்கு முன் தேதியிட்டு ரத்து செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனே தலையிட்டு பத்திரிகையாளர்களுக்கான வீட்டு மனை திட்டத்தில் உள்ள நிபந்தனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், ரத்து செய்யப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்