நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டெருமைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து நடமாடி வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியான குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் பல வாழ்ந்து வருகின்றன. காட்டெருமைகள் இங்கு அதிகமுள்ள நிலையில் அவ்வபோது சாலைகளிலும், மக்கள் வாழும் பகுதிகளிலும் சில காட்டெருமைகள் தென்படுவது வழக்கமாக உள்ளது.
சமீபகாலமாக காட்டெருமைகள் மக்கள் வாழும் பகுதிகளில் நடமாடுவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சில பகுதிகளில் மக்கள் வாழும் வீடுகள் பக்கம் செல்லும் காட்டெருமைகள் வீட்டு கதவுகளையும் முட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் சிலர் காட்டெருமைகளுக்கு உணவு வைத்துள்ளனர்.
ஆனால் இதுபோல செய்வது ஆபத்து என பொதுவான கருத்து உள்ளது. காட்டெருமைகள் தாக்கும் ஆபத்தும் உள்ளதால் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.