தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் ஈடுபடும்- அண்ணாமலை

வெள்ளி, 6 அக்டோபர் 2023 (15:23 IST)
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனைக் கட்டிடத்தை இடிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால், தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக, பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

''மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க, ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு, 1951- ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தருமபுரம் ஆதீனம் சார்பாக, பல ஆண்டுகளாக, பலருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது. 
 
பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, இலவச மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, மருத்துவமனை கட்டிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல், நகராட்சியும், மருத்துவமனையை புனரமைக்காத சூழலில், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி குப்பைகளை தரம் பிரிக்க, புதிய நுண்ணுயிர் கிடங்கை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது.
 
தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்கு கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காத நிலையில், தற்போது நகராட்சி, அந்தக் கட்டிடத்தை இடிக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. தருமபுரம் ஆதீனம் இடம் தானமாக வழங்கி, பொதுமக்கள் நலனுக்காகத் தொடங்கிய இலவச மருத்துவமனையை, நகராட்சி கைப்பற்றி, அரசின் கையாலாகாத்தனத்தால் இன்று அதன் நோக்கத்தையே சிதைத்து, பராமரிப்பின்றி குப்பைமேடாக ஆக்கி வைத்திருக்கும் நிலையில், மீண்டும் அந்த இடத்தை மருத்துவமனையாக நடத்த விருப்பம் தெரிவிக்கும் தருமபுரம் ஆதீனத்திடம் இடத்தை ஒப்படைப்பதே முறையாக இருக்கும். 
 
கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிக்கும் அராஜகத்தை நிறுத்திக்கொண்டு, உடனடியாக, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனைக் கட்டிடத்தை இடிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால், தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக, பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்