அண்ணாமலையை விமர்சித்தால் அதிமுக ஃபைல்ஸ் வரும்: பாஜக எச்சரிக்கை

புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:50 IST)
அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்தால் அதிமுகவின் ஊழல் அம்பலமாகும் வகையில் அதிமுக ஃபைல்ஸ் வரும் என பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் என்பவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
 
அண்ணாமலை பாஜக தொண்டர்கள் மற்றும் தேச பக்தி நிறைந்த மக்களின் இதயத்தில் மதிப்புமிக்க தலைவராக உள்ளார். அவரை அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர் செல்லூர் கே.ராஜ், டி.ஜெயக்குமார் ஆகியோர் தங்களை ஜெயலலிதா போல் நினைத்துக் கொண்டும்,
 
அதிமுக நான்கு, ஐந்து அணிகளாக பிளவு பட்டிருப்பதை மறந்தும் தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதை பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அதிமுகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தோழமை இயக்கம் என்ற பரிவுடன் மீண்டும் ஒன்றிணைத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் 66 எம்.எல்.ஏ-க்களை இடம் பெற வைத்தனர்.
 
அந்த நன்றியை அதிமுகவினர் மறந்துவிட்டார்கள். வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை வாங்கும் பாஜகவுடன் போட்டியிட அதிமுக தயாரா? அதிமுகவின் பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும்.
 
ஆளும் கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து திமுக ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஏற்கெனவே ஆண்ட அதிமுக ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடிப்பிடித்து பாஜக தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும். மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம் என அதிமுக-வினரை எச்சரிக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் ஒரு மேயர் பதவியைக் கூட அதிமுகவால் பிடிக்க முடியவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
 
எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், இரட்டை இலை சின்னத்தின் மீது தொண்டர்கள் வைத்தி ருக்கும் மரியாதை காரணமாக அமைதி காத்து வருகிறோம். வரும் காலங்களில் அதிமுகவினர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தால் அதிமுகவினரின் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலை வரும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை எச்சரிக் கிறோம். இவ்வாறு அறிக்கையில் மகா சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்