அதிமுகவை நம்பி பலனில்லை ; திமுகவுடன் கை கோர்க்கும் பாஜக?

புதன், 20 டிசம்பர் 2017 (10:36 IST)
அடுத்தடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிற்கு பாஜக வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படும் ஆட்சி பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மக்களும் உணர்ந்துள்ளனர். ஜெயலலிதா இருந்த வரை மாநில உரிமைகளை அவர் எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால், தற்போதைய நிலை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. எனவே, அதிமுக ஆட்சியின் மீது தமிழக மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். 
 
உளவுத்துறை வழியாக இதை பாஜகவும் உணர்ந்துள்ளது. எனவே, அவர்களின் பார்வை திமுக பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் விளைவாகத்தான் கடந்த முறை சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தமிழக அரசியல்வாதிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என பாஜகவினர் கூறிக்கொண்டாலும், அதில் அரசியல் இருப்பது அனைவரும் அறிந்ததே.
 
பெரிதும் எதிர்பார்க்கப்படும் 2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இருந்து சில பாஜக நபர்கள் சமீபத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் அழைத்து பேசியுள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் உங்கள் செயல்பாடு அருமையாக உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். 2ஜி வழக்கிலும் உங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகும்” எனக் கூறினார்களாம். இதனால், திமுக தரப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதாவது, மக்களின் அதிருப்தியை சந்தித்துள்ள அதிமுகவை நம்பி இனி பலனில்லை. எனவே, அடுத்தடுத்த தேர்தலில் திமுகவுடன் கை கோர்ப்பதே சிறந்தது என்ற முடிவிற்கு பாஜக வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், 2ஜி வழக்கிலும் திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால், அக்கட்சியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் கறையும் அகற்றப்படும். எனவே, அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதே நல்லது என டெல்லி வட்டாரம் கருதுவதாக தெரிகிறது.
 
எனவே, அதற்கான காய் நகர்த்தலை டெல்லி மேலிடம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதுபற்றி மு.க.ஸ்டாலினுடம் பாஜக பிரமுகர்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்