பாஜக கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிதான் - பொன்.ராதாகிருஷ்ணன்

வீரமணி பன்னீர்செல்வம்

ஞாயிறு, 18 மே 2014 (13:40 IST)
பாஜக கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடிதான் காரணம். இதனால் பல அரசியல் கட்சிகள் தவறு செய்ய நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக பாஜகவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
 
இந்தத் தேர்தலில் தேசிய அளவில் பாஜக திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. 340 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தில் நானும், கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அரசியல் ரீதியாக என்னென்ன நடக்க கூடாதோ அதுவெல்லாம் நடந்துள்ளது. 144 தடை எதற்காக தேர்தல் ஆணையம் போட்டது என்று தெரியவில்லை. அது மிகப்பெரிய தவறு.
 
அரசியல் கட்சிகள் தவறு செய்வதற்கு அது வழி வகுத்துவிட்டது. இரவு 10 மணிக்கு மேல் ஓட்டு கேட்கலாம் என்று கூறியதால் பல அரசியல் கட்சிகளுக்கு தவறு செய்ய வாய்ப்பாக அமைந்துவிட்டது. பாஜக கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடிதான் காரணம்.
 
நாடாளுமன்றத்தில் முதல் பிரச்சனையாக தமிழக மீனவர் பிரச்சனையை பேசுவேன். மீனவர் பிரச்சனை உயிர் பிரச்சனையாகும். இந்தியாவின் முக்கியமான மற்றும் மானப் பிரச்சனையாக இருப்பதால் அது பற்றி பேசுவேன்.
 
விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுவேன். நதிநீர் இணைப்பு குறித்து வலியுறுத்துவேன். இலங்கை தமிழர் நலன் மட்டுமல்ல; உலக தமிழர்கள் பாதுகாப்பு குறித்தும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.
 
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்