வங்கக் கடலில் 'மொந்தா' புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் அபாயக் கூண்டு!

Mahendran

சனி, 25 அக்டோபர் 2025 (12:11 IST)
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, அக்டோபர் 27ஆம் தேதி 'மொந்தா' புயலாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் உருவாகும் இந்த புயல், தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக் கடலில் இருந்து ஆந்திர மாநிலத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது முக்கிய துறைமுகங்களான சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், மற்றும் தூத்துக்குடியில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டுள்ளது.
 
புயல் ஆந்திராவை நோக்கிச் சென்றாலும், வட தமிழக மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்