மாணவரை கொடூரமாக தாக்கிய பங்காரு அடிகாளார் மகன் - விரைவில் கைது?

வெள்ளி, 17 மார்ச் 2017 (14:52 IST)
மேல்மருவத்தூர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை, பங்காரு அடிகளார் மகன் செந்தில் குமார் மற்றும் அவரின் ஆட்கள் கொடூரமாக தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையிலிருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மேல்மருவத்தூரில், பங்காரு அடிகளார் என்பவர் ஆதிபராசக்தி கோவிலை கட்டி வணங்கி வந்தார். அதன்பின் அவரே கடவுளாகவும் சித்தரிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் உள்ள பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அந்த கோவிலுக்கு தினமும் வந்து செல்கின்றனர். தற்போது அவரது மகன் செந்தில்குமாரை, தன்னுடைய இடத்திற்கு கொண்டு வரும் தீவிர முயற்சியில் பங்காரு அடிகளார் ஈடுபட்டுள்ளார். 
 
இந்நிலையில், அடிகளார் குடும்பம் நடத்தும் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வரும் விஜய் என்ற மாணவர், அந்த கல்லூரி நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்காதது குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். 
 
இதை அறிந்த கல்லூரி மேலாளரும், பங்காரு அடிகளாரின் மகனுமான செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோர் சேர்ந்து, மாணவர் விஜயை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இனிமேல், கல்லூரி குறித்து எந்த தகவலும் வெளியே பரப்பினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் தெரிகிறது. 
 
இதனால் பலத்த காயமடைந்த மாணவர் விஜய், தற்போது சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தன்னை தாக்கிய செந்தில்குமார் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். இதன் பேரில் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமார் மீது கொலை மிரட்டல், பெரும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
எனவே, செந்தில் குமார் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்