ஹீலர் பாஸ்கரின் நிஷ்டை மையத்துக்கு தடை....

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (16:32 IST)
இயற்கை மருத்துவராக தன்னை சித்தரித்துக்கொண்டு சொற்பொழிவாற்றி வந்த ஹீலர் பாஸ்கர் நடத்தி வந்த நிஷ்டை மையத்திற்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

 
வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்ய நிஷ்டை சர்வதேஷ வாழ்வியல் இலவச பயிற்சி முகாம் வருகிற 26ம் தேதி நடைபெறுவதாக ஹீலர் பாஸ்கர் அறிவித்தார். இதன் மூலம், மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை என எதுவும் இல்லாமலும், மருத்துவரிடம் செல்லாமலும் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பயிற்சி அளிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
 
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், சுகப்பிரசவம் குறித்த பயிற்சிக்காக ஹீலர் பாஸ்கர் பலரிடம் ரூ.5 ஆயிரம் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து சிலர் போலீசாரிடம் புகாரும் அளித்தனர். எனவே, ஹீலர் பாஸ்கரை மோசடி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் இன்று கைது செய்தனர். 

 
இந்நிலையில், கோவையில் அவர் நடத்தி வந்த நிஷ்டை மையத்திற்கு இன்று தற்காலிக தடை விதிக்கப்பட்டது. போலீசார் அங்கு ஆய்வு செய்த போது 50க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுவதற்காக அங்கு தங்கியிருந்து தெரிய வந்தது. எனவே, அவர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். அதேபோல், வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முழு அறிக்கை அளித்த பின், ஹீலர் பாஸ்கர் நடத்தி வந்த நிஷ்டை மையத்தை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் எனக்கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்