இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் இஸ்ரேலில் பேருந்துகளில் குண்டு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வந்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டின் பேரில் போர் நிறுத்தம் அமலாகியுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளும், ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணையக்கைதிகளும் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்தக் கட்டமாக காசாவை மொத்தமாக அமெரிக்க ராணுவம் பொறுப்பில் எடுத்து மறுக்கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இது காசா மக்களை மொத்தமாக வெளியேற்ற அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்யும் சூழ்ச்சி என அரபு நாடுகள், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கிடையே நேற்று இரவு இஸ்ரேல் பேருந்துகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இஸ்ரேல், டெல் அவிவ் அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் குண்டு வெடித்துள்ளது. பேருந்துகளில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் கூறி வருகிறது.
ஆனால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது பேருந்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு சம்பவம் எதும் ஏற்படவில்லை. இதில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த பாணி முன்னதாக ஹமாஸ் ஏற்படுத்திய குண்டு வெடிப்பு சம்பவங்களை ஒத்திருந்தாலும், இதற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் இஸ்ரேலில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K