அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்து மனு அளித்தது.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேதி அறிவிக்கப்படட்டும். பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜுலை 1 ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஜூன் 28 ஆம் தேதிக் கூடும் சட்டமன்றத்தில் முதல்நாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒத்தி வைத்துவிட்டால் அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அதனால் ஜூலை 1 ஆம் தேதியான திங்கள் கிழமையன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.