ஓம் பிர்லா: புதிய மக்களவை சபாநாயகரின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் என்ன?

செவ்வாய், 18 ஜூன் 2019 (21:15 IST)
இந்திய நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான இந்தக் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால், ஓம் பிர்லாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
 
இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததுள்ள நிலையில், புதிய மக்களவை உறுப்பினர்களின் பதவியேற்புடன் நேற்று புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், நேற்று, திங்கள்கிழமை தொடங்கியது.
 
இடைக்கால மக்களவை சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் வீரேந்திர குமார் செயல்பட்டு வரும் நிலையில், நாளை புதிய மக்களவை சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை, புதன்கிழமை, நடைபெறவுள்ளது.
 
யார் இந்த ஓம் பிர்லா?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோட்டா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராம்நரைன் மீனாவைவிட சுமார் 2.8 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார் 56 வயதாகும் ஓம் பிர்லா.
 
 
2014இல் மக்களவைக்கு முதல் முறை தேர்வாகும் முன், ராஜஸ்தான் மாநிலத்தில் 2003 முதல் 2014 வரை தொடர்ந்து மூன்று முறை தெற்கு கோட்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.
 
1987இல் முதுநிலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ள ஓம் பிர்லா மாணவர் அரசியல் மூலம் அரசியலுக்கு வந்தவர்.
 
1979ஆம் ஆண்டு கோட்டா மாவட்டம் குமான்புராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத் தலைவராக 17 வயதில் தேர்வானவர்.
 
பாஜக இளைஞர் அணியின் மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்.
 
ராஜஸ்தான் மாநிலத்தின் 13வது சட்டமன்றப் பதவிக்காலத்தில் 500க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார் ஓம் பிர்லா என மக்களவை இணையதளம் தெரிவிக்கிறது.
 
சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள்
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஓம் பிர்லா தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு ரூபாய் 4 கோடியே 83 லட்சத்து 47 ஆயிரத்து 737 மதிப்புள்ள சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனக்கு கடன் எதுவும் இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
 
கோட்டா மாவட்டம் ராம்கஞ்மண்டி எனும் ஊரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்டவிரோதமாகக் கூடுதல்) மற்றும் 283 (பொது வழியை மறித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று பதிவானது.
 
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுவின் தலைவராக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தேர்வான அதிர் ரஞ்சன் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்