தரையிறங்க 5 நிமிடங்கள் மட்டுமே பாக்கி... அதற்குள் விபத்துக்குள்ளான சோகம்!

புதன், 8 டிசம்பர் 2021 (15:12 IST)
ஹெலிகாப்டர் விபத்து நடந்த பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

 
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் முப்படை தளபதி பிபின் ராவத்தும் பயணம் செய்துள்ளார். 
 
இந்த விபத்தில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது. பல உடல்கள் எரிந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நீலகிரிக்கு இன்று மாலை 5 மணி அளவில் விரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
மேலும் இன்று காலை 11.47 மணிக்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குன்னூர் காட்டேரி பகுதியில் மதியம் 12.20 மணிக்கு நடந்ததாகவும், இதன் பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் எரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து 10 கிமி முன்னால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்