ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! சிக்கும் அரசியல் புள்ளிகள்.! பாஜக பெண் பிரமுகர் தலைமறைவு..!!

Senthil Velan

வியாழன், 18 ஜூலை 2024 (09:01 IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  செயலாளர் அஞ்சலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 
 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 19ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

திருவேங்கடம் என்கவுண்டர்: 

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது மட்டுமல்லாமல் முதல் வெட்டு வெட்டிய  திருவேங்கடம் என்பது தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஆயுதங்களை ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை  அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார். மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
சிக்கிய அரசியல் புள்ளிகள்:
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும் மற்றும் வழக்கறிஞருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் கைது செய்யப்பட்டனர். மேலும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகனும் கைது செய்யப்பட்டார்.  
 
அஞ்சலை தலைமறைவு:
 
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வட சென்னை பாஜக மகளிரணி செயலாளரான அஞ்சலை தலைமறைவாகவுள்ள நிலையில், அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
 
யார் இந்த அஞ்சலை:
 
அஞ்சலை வடசென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்தவர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டவர். இவர் திடீரென பாஜக ஐக்கியமாகி வடசென்னை மகளிரணி செயலாளரானார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலரும் அஞ்சலை தான் கை காட்டி வருகின்றனர். 
 
தலைமறைவாக உள்ள இவர் கைது செய்யப்படும்  பட்சத்தில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கினாரா? அல்லது  இவருக்கு பின்னால் வேறெரு யாராவது உள்ளார்களா? என்பது தெரியவரும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் புள்ளிகள் பலர் கைதாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்