கேரளாவில் கடந்த 5 ஆண்டு காலமாக இடுக்கி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் புகுந்த அரிக்கொம்பன் ஒரு ரேசன் கடையை துவம்சம் செய்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் கம்பம் பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் அங்கு மக்கள் நடமாடும் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் மக்கள் தலைதெறிக்க நாலாபுறமும் ஓடும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, மக்கள் யாரும் வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அரிக்கொம்பன் கம்பத்திலிருந்து 10 கி.மீ விலகி சென்று சுருளிப்பட்டியில் உள்ள தோப்பு ஒன்றில் முகாமிட்டுள்ளது. அரிக்கொம்பனை பிடித்து சரணாலய காட்டுப் பகுதியில் விடுவதற்காக மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரிக்கொம்பன் மீண்டும் வனப்பகுதியில் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.