சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவிரையாளர்களுக்கான ஊதியம் ரூ.30,000 உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், அதேபோல் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளுக்கும் இந்த ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் 20,000 ரூபாயிலிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி மாத ஊதியம், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு முழுமையாக மனநிறைவு அளிக்காது என்றாலும் கூட, வரவேற்கத்தக்கது ஆகும்.
இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற மாத ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த கல்வியாண்டில் தான் ரூ.20,000 என்ற நிலையை எட்டியது. அதுவும் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள போதிலும், அது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதில்லை. தமிழக அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும் போதிலும் கலை அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அந்த அளவு ஊதியம் வழங்கப்படுவதில்லை.
வேளாண் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க கடந்த ஆண்டு உயர்கல்வித்துறை திட்டம் வகுத்த போதிலும், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள ஊதிய உயர்வு கூட அந்த பல்கலைக்கழகத்தின் துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் தான். தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 5583 கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு கிடைக்காது.
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது அமைப்பு சாரா பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகக் குறைவு ஆகும். இதை உணர்ந்து சென்னை பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மாதம் ரூ.30,000 என்ற ஊதிய உயர்வை தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். அத்துடன் பணிநிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.