செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா... மது விற்பனைத்துறை அமைச்சரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!
வியாழன், 4 மே 2023 (12:22 IST)
செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா... மது விற்பனைத்துறை அமைச்சரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க இயலாத மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேண்டுமென்றால் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேசி நாடு முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வரலாமே? என்று தம்மைத்தாமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எதிர்வினா எழுப்பியிருக்கிறார். அவரது அறியாமையை எண்ணி நான் வருத்தமடைகிறேன்.
ஆக்கப்பூர்வமாக செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் விட்டு விட்டு, சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிகவளாகம் ஒன்றின் எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் அமைக்கப்பட்டுள்ள மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரத்தை பார்வையிட்ட தமிழக அரசின் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தானியங்கி எந்திரங்களுக்காக தமிழக அரசு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும், மது நிறுவனங்கள் தான் அவற்றை இலவசமாக வழங்கின; அதைத் தான் டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துகிறது என்று விளக்கமளித்திருக்கிறார்.
இப்படி ஒரு விளக்கத்தை அளித்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும். ஆனால், இப்படி ஒரு மதுவிலக்குத்துறை அமைச்சரை பெற்றிருக்கிறோமே? என்று தமிழ்நாட்டு மக்கள் தான் வெட்கப்பட வேண்டியிருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவற்றை சில்லறை விற்பனைக் கடைகள் அப்படியே பயன்படுத்துவதற்கு மது ஒன்றும் குளிர்பானம் அல்ல.
குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தானியங்கி எந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகளை சில்லறை வணிகக் கடைகளுக்கு இலவசமாக வழங்குவதும், கடைகள் அவற்றை பயன்படுத்துவதும் உண்மை தான். தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை இலவசமாக வழங்குவதன் நோக்கம் தங்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.
மது நிறுவனங்களுக்கும் தாங்கள் தயாரிக்கும் மதுவகைகள் அதிக அளவில் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கம் இருக்கலாம்; அதற்காக அவை இத்தகைய எந்திரங்களை வழங்கலாம். ஆனால், அவற்றை அப்படியே பயன்படுத்த டாஸ்மாக் ஒன்றும் செந்தில் பாலாஜி என்ற தனிநபர் நடத்தும் தனியார் நிறுவனம் அல்ல... தமிழக அரசு நிறுவனம். அதன் வணிக நடைமுறையில் செய்யப்படும் எந்த மாற்றமும் அரசின் கொள்கை முடிவாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் விவாதித்து தான் முடிவெடுக்க வேண்டும்.
அதையும் கடந்து மது நிறுவனங்கள் அவற்றின் மது வணிகத்தை அதிகரிப்பதற்காக எந்திரங்களை வழங்கி, அவற்றை டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துவதை செந்தில் பாலாஜி ஆதரிக்கிறார் என்றால், மது ஆலைகளின் லாபம் அதிகரிப்பதற்காக மது வணிகம் பெருகுவதையும் ஆதரிக்கிறார் என்று தான் பொருள். அப்படியானால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா... மது விற்பனைத்துறை அமைச்சரா?
தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வது குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதைத் தான் மக்கள் நல அரசு மதிக்க வேண்டும். மாறாக, மது நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன என்பதற்காக தானியங்கி எந்திரங்களை பயன்படுத்த செந்தில் பாலாஜி ஒன்றும் மது ஆலைகளின் முகவர் அல்ல... தமிழகத்தின் மதுவிலக்கு அமைச்சர்.
அடுத்ததாக, ''நாடாளுமன்றத்தில் பேசி தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வருவது தானே; அதை விடுத்து இங்கு வந்து அன்புமணி அரசியல் செய்கிறார்'' என்று பொங்கி எழுந்திருக்கிறார் பெருமாளின் பெயரைக் கொண்ட அமைச்சர். அவருக்கு பிழைப்புவாத அரசியல் தெரிந்த அளவுக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை என்பதையே அவரது வாதம் காட்டுகிறது.
மதுவிலக்கு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக உள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவதாக இடம் பெற்றுள்ளது. அதன்படி மது உற்பத்தி, வணிகம், விற்பனைத் தடை உள்ளிட்ட எந்த முடிவையும் மாநில அரசு தான் எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசோ, நாடாளுமன்றமோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது ஏனோ எல்லாம் தெரிந்த செந்தில் பாலாஜிக்கு தெரியவில்லை.
1970-களில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகள் மதுவுக்கு இரையாகிவிட்டன. இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரே தீர்வு படிப்படியாகவோ, உடனடியாகவோ தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான்.
அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் முதல் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதல்வர் ஒப்படைக்க வேண்டும்."