திருமணமான பெண் எஸ்ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்ற காவலர் கைது

திங்கள், 7 ஜனவரி 2019 (10:58 IST)
சென்னையில் ஏற்கனவே திருமணமான பெண் எஸ்ஐயை கழுத்தில் கத்தியை வைத்து வலுக்கட்டாயமாக  தாலி கட்ட முயன்ற  ஊர்காவல் படை காவலர் கைது  செய்யப்பட்டுள்ளார்.


 
சென்னை நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மணிமேகலை(24), இவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலூர் காட்பாடியில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது, அங்கு ஊர் காவல் படை காவலராக பணியாற்றிய பாலசந்திரன் என்பவருடன் அலுவல் ரீதியாக மற்றும் நட்பு ரீதியாக பழகி வந்தாராம். ஊர்காவல் படை காவலராக பணியாற்றிய ஜெயச்சந்திரன், இதை தவறாக புரிந்து கொண்டு மணிமேகலையை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உதவி ஆய்வாளர் மணிமேகலைக்கு திருமணம் ஆன பின்பும் விடாமல் பாலசந்திரன் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்ததாக மணிமேகலை கூறினார். இதனிடையே பாலச்சந்திரனின் தவறான செயலை பல முறை கண்டித்து மணிமேகலை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி நேற்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்த போது மணிமேகலைக்கு பாலசந்திரன் போன் செய்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவல் நிலையம் வரவழைத்து  எச்சரிக்கை செய்து அனுப்ப திட்டமிட்டு உள்ளார் மணிமேகலை.  இதையடுத்து பாலசந்திரன் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் வந்தார். அங்கு வைத்து அவரிடம் மணிமேகலை பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பாலசந்திரன் சற்றும் எதிர்பாராத விதமாக மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்து தாலி கட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமேகலை கூச்சல் போட்டதில் அருகில் இருந்த காவலர்கள் பாலசந்திரனை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். எழும்பூர் போலீசார் பாலசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு தாலி , இரண்டு மோதிரம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்