திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார். தங்க ஆபரணங்கள் செய்யும் பட்டறையில் பணிபுரியும் இவர் இரவு பணிகள் முடிந்து தாமதமாக செல்வார். அந்த தெருவில உள்ள நாய் ஒன்று இவர் இரவு நேரங்களில் தனியாக வரும்போதெல்லாம் இவரை துரத்தி வந்து குரைத்திருக்கிறது. இவர் ஒவ்வொரு முறை அந்த நாயை பார்க்கும்போதும் தெரித்து ஓடியிருக்கிறார். ஒருநாள் இரவு வழக்கம்போல இவரை நாய் துரத்த தொடங்க கல்லை எடுத்து அடித்திருக்கிறார். இதில் சில காயங்களுடன் நாய் தப்பிவிட்டது.
கடுப்பில் மறுநாள் வரை காத்திருந்த நாய் அன்று இரவு அவர் வரும்போது கடித்துவிட்டது. இதனால் அவருக்கும், நாயுக்குமான பகை அதிகமானது. எனவே அந்த நாயை கொன்றுவிட தீர்மானித்தார் விஜயகுமார். இதற்காக திட்டம் போட்டு கோழிக்கறியும், விஷமும் வாங்கி கொண்டு வேலைக்கு போயிருக்கிறார். இரவு திரும்பி வரும்போது கறியில் விஷத்தை தடவி ரோட்டில் போட்டுவிட்டு போய்விட்டார். அதை சாப்பிட்ட நாய் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்தது. இதை அறியாத அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த 7,8 பூனைகள் விஷம் கலந்த கறியை ஆர்வமாக சாப்பிட்டுள்ளன. அவைகளும் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மறுநாள் காலை மார்க்கெட் பகுதிக்கு வந்த கடைக்காரர்கள் இப்படி கொத்து கொத்தாக பூனைகளும், நாயும் இறந்து கிடப்பதை பார்த்து அதிச்சி அடைந்தனர். அவற்றை சாலையின் ஓரமாக வரிசையாக கிடத்தி பூத்தூவி அஞ்சலி செலுத்தினர்.