நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே கீரங்குடி கிராமத்தில் ஸ்ரீ பூர்ண புஷ்களாம்பிகா உடனுறை ஸ்ரீ அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் 72 ஆம் ஆண்டு, திருவிழா கடந்த ஜூன் 16 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
தினமும் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகமும் சுவாமி வீதியுலாக்காட்சியும் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து இரவு அழிந்து வரும் பாரம்பரிய நாடகக் கலையை மீட்டு எடுக்கும் வகையில் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் அரங்கேற்றப்பட்டது.
கோயில் திருவிழாக்களில் பெருமளவு ஆடல் பாடல் ,இன்னிசை பட்டிமன்றங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. இருப்பினும் கீரங்குடியில் கிராமத்தில் நாடகக் கலையின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் அதனை மீட்டு இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்பட்ட நாடக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அரிச்சந்திரன், சந்திரமதி, விஸ்வாமித்திரன், சத்திய கீர்த்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நாடகக் கலைஞர்கள் நடித்து தங்களுடைய கலைத்திறமையை வெளிப்படுத்தியது பார்ப்போர் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்தது. விடிய விடிய சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நாடக நிகழ்வினை கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.
நாடகத்தின் நிறைவாக நடைபெற்ற பட்டாபிஷேகம் நடைபெற்றது.
நாடகத்தில் அரிச்சந்திரனாக மன்னை நடிகர் சங்கத் தலைவர் பைங்காட்டூர் தங்க.கிருஷ்ணமூர்த்தி, சந்திரமதியாக கவிதா, காலகண்டையராக மன்னை ஆர். பி. சண்முகசுந்தரம், சத்திய கீர்த்தியாக நிம்மேலி தங்க.தேவேந்திரன், பபுனாக சிங்கை. சிவா உள்ளிட்டோர் அடங்கிய நாடக குழுவினரால் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் விழா குழு நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.