தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி!

J.Durai

புதன், 19 ஜூன் 2024 (17:20 IST)
திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. 
 
இந்த சாதனைக்கு பின்னரான சவால்கள் குறித்து விவரிப்பதற்காக கலைஞர்களுக்கு தெருக்கூத்து பயிற்சியளித்த திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய தலைவர் சிவா, தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு) மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்...
 
என்னுடைய இயக்கத்தில் வெளியான 'வெங்காயம்' எனும் திரைப்படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் அழுத்தமாக விவரித்திருந்தேன். இதனை அனைத்து ஊடகங்களும் குறிப்பிட்டு எழுதி என்னுடைய முயற்சியை பாராட்டி இருந்தன.
 
நான் திரைத்துறைக்கு வருகை தந்த பிறகு தான் தெருக்கூத்து கலையின் அசலான மதிப்பினை உணர்ந்தேன். சினிமாவில் ஒவ்வொரு பிரிவிற்கும் பத்து உதவியாளர்களை வைத்து பணியாற்றுவோம். ஒப்பனை, சிகை அலங்காரம், ஆடை வடிவமைப்பு ,சண்டை பயிற்சி, இயக்கம் என ஒவ்வொன்றுக்கும் தேவையான உதவியாளர்களை வைத்து தான் பணியாற்றுவோம். ஆனால் நம்முடைய தாத்தாக்களும் தந்தைமார்களும் கிராமப்புறத்தில் தெருக்கூத்து கலையை நிகழ்த்தும்போது, அவர்களே ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் செய்து கொண்டு மேடை ஏறிய பிறகு நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் செய்வார்கள். அதிலும் கடை கோடியில் உட்காந்து ரசிக்கும் ரசிகர்களுக்கும் கேட்கும் வகையில் மிகவும் உரக்கப் பாடுவார்கள். நிகழ்ச்சி முடியும் வரை ஆற்றல் குறையாமல் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் தெருக்கூத்து கலையை நிகழ்த்துவார்கள். அவர்களின் கலை ஈடுபாடு இந்த தருணத்தில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
 
அந்தத் தருணத்தில் இந்த தெருக்கூத்து கலை மிகப்பெரிய அளவிலான கலை வடிவம் என்பதை உணர்ந்தேன்.
 
அதன் பிறகு இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அதாவது அவர்களும் ரசிக்கத்தக்க வகையில் இந்த கலையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். 
அந்தத் தருணத்தில் வள்ளல்கள் என்ற கருத்துருவில் கதைகளை தேடத் தொடங்கிய போது.. பத்துக்கும் மேற்பட்ட கதைகள் கிடைத்தன. அதியமான், குமணன், பாரிவள்ளல் என ஏராளமான வள்ளல்களின் கதைகளும், அவர்களின் அசலான வாழ்வியல் சம்பவங்களும் கிடைத்தன. 
 
அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தொடர்பு கிடைத்தவுடன்.. அவர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் தெருக்கூத்து கலையினை மேடையில் நிகழ்த்த விரும்பினோம். இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். அத்துடன் உலக மக்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக இந்த தெருக்கூத்தினை நடத்திட வேண்டும் என்றனர். இந்த எண்ணத்தை தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் முன்வைக்க நானும் இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறி அந்த வாய்ப்பினை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டேன் என்றார்.
 
தமிழ்நாடு அறக்கட்டளையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சிவா பேசுகையில்....
 
 தமிழ்நாடு அறக்கட்டளை 1974ம் ஆண்டில் பால்டிமோர் எனும் இடத்தில் ஐந்து நபர்களால் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களில் தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளை இயங்கி வருகிறது. அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களில் நன்கொடை திரட்டி, அதனை தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம்.  கல்வி, பெண்கள் வேலை வாய்ப்பு, சுகாதாரம், ஊரக மேம்பாடு ஆகிய நான்கு திட்டங்களை லட்சியமாகக் கொண்டு எங்களது அறக்கட்டளை இயங்கி வருகிறது.
 
2019ம் ஆண்டில் சிக்காகோ நகரில் உலக தமிழ ஆராய்ச்சி மாநாட்டை எங்களது அறக்கட்டளை தான் முன்னின்று பொறுப்பேற்று நடத்தியது.  இந்த மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 
50 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என திட்டமிட்டோம். இதற்காக சிக்காகோ நகரில் மூன்று நாட்கள் விழா நடத்தவும் தீர்மானித்தோம்.  இந்த விழாவின் நோக்கமாக தமிழர் பண்பாட்டை மேலோங்க செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டோம். மேலும் 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அறக்கட்டளையை இயங்கச் செய்த நிர்வாகிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், அங்கு வாழும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கும், தமிழகத்தில் உள்ள பூர்வீக தமிழர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கான கலாச்சார ரீதியிலான உறவை நீட்சி அடைய செய்யும் வகையிலும் மூன்று நாள் விழாவை நடத்த திட்டமிட்டோம்.
 
மேலும் பொன்விழா நிகழ்வில் திரட்டப்படும் நன்கொடையை மூலதனமாகக் கொண்டு தமிழகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவும் இந்த விழாவை நடத்தினோம் என்றார்.
 
தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் பேசுகையில்....
 
அரசாங்க அதிகாரியாக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற பின் இந்த அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று ஆறாண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். நம்மில் பலருக்கும் தெருக்கூத்து என்றால் தெரியாது.  இந்தக் கலையை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இரண்டு மாத காலம் பயிற்சி அளித்து, அவர்களை மேடை ஏற்றி தெருக்கூத்தினை நிகழ்த்த வைத்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதற்காக இயக்குநர் சங்ககிரி ராஜகுமாரை பாராட்டுகிறேன். 
 
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நானும் சிகாகோவிற்கு சென்றிருந்தேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. அங்கு வருகை தந்திருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டினர்.  தமிழ்நாட்டிற்கு வெளியே இந்த கலையை எடுத்துச் சென்று மேடை ஏற்றிய இயக்குநர் சங்ககிரி ராஜகுமாரை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.
 
2017ம் ஆண்டிற்கு பிறகு தான் அமெரிக்காவிலிருந்து இந்த அறக்கட்டளைக்கு ஓரளவு நன்கொடை வரத் தொடங்கியது.  தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அமெரிக்காவில் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் கொடுக்கும் நிதி மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, இவற்றையெல்லாம் சேகரித்து தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள். அதனை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 
 
கடந்த ஆண்டு டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பிறகு ஆறு கோடி ரூபாய் நிதி நன்கொடையாக கிடைத்தது. இந்த ஆண்டும் இதே அளவிற்கான நன்கொடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நன்கொடை நிதியை மூலதன நிதியாக பயன்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 99 கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மெல்ல கற்றல் திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்றல் மேம்பாட்டிற்காக செலவழிக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் ஆறாயிரம் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதனை அடுத்து கிராமப்புற பகுதிகளில் வாழும் ஏழை எளிய பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இதற்காக பரிபூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் தமிழக அரசுக்கும், நன்கொடை வழங்கி வரும் அமெரிக்கா வாழ் தமிழ்நாடு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 
தமிழ்நாடு அறக்கட்டளையின் அமெரிக்க உறுப்பினரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன் பேசுகையில்....
 
தெருக்கூத்து கலையை மேடை ஏற்ற வேண்டும் என்று குழு விவாதம் நடைபெற்ற போது, இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினேன். பிறகு நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலில் 'கின்னஸ் சாதனை படைத்திட வேண்டும் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு' என சொன்னார்கள்.
 
இந்த நிகழ்ச்சிக்காக சிகாகோ மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களில் இருந்தும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை திரட்டினோம்.  தொடங்கும் போது எளிதாக இருந்தது. அதன் பிறகு சங்ககிரி ராஜ்குமாரிடம் பேசத் தொடங்கிய போது.. குறிப்பாக கலைஞர்களுக்கான உடை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற விஷயங்களை பற்றி விவாதித்த போது சவால்கள் உருவாகின. இந்தியாவில் உருவான ஆடைகளை சேகரித்து பாதுகாத்து அதனை அமெரிக்காவுக்கு வரவழைத்தோம். 
தலையில் வைத்துக் கொள்ளும் சின்ன கிளிப்புகள் கூட நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் ராஜ்குமார் உறுதியாக இருந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் ஐந்து வயது குழந்தைகள் முதல் அறுபது வயது நபர்கள் வரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் தமிழ் தெளிவாக உச்சரிக்கத் தெரியாது. பயிற்சி தொடங்கிய மூன்று நாட்கள் வரை மாணவக் கலைஞர்களுக்கு இதன் மீது நாட்டமே இல்லை. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை எனக்கும் முழு நம்பிக்கை ஏற்படவே இல்லை. முந்நூறு கலைஞர்கள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. ஆனால் தெருக்கூத்து கலைக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பு செய்து உடை வந்த பிறகு அதனை நான் அணிந்து ஒப்பனை செய்து கொண்டு வீடியோவாக தயாரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிறகு தான். அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட்டு, பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டனர்.
 
ஒத்திகையை நாங்கள் முதலில் இணையதளம் வழியாகவும் பிறகு குழுவாக பிரித்தும் மேற்கொண்டோம்.  மாணவ கலைஞர்களுக்கு தெருக்கூத்து என்றால் என்ன என்பதை தெளிவாக புரிய வைப்பதற்கு ஒரு மாத காலம் ஆனது.  அதனைத் தொடர்ந்து அதியமான் யார் என கேள்வி எழுப்புவார்கள். 
 
அதை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சிறப்பான திரைக்கதை மூலம் நேர்த்தியாக விளக்கினார். 
 
நான் இந்த நிகழ்ச்சியில் கட்டியக்காரனாக வேடமிட்டிருந்தேன். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால்.. இயல்பான தமிழில் அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ளும் தமிழில் பேசலாம் என்ற சௌகரியம் இருந்தது. 
 
தெருக்கூத்து என்ற உடன் புராணக் கதைகளை மட்டும் பேசாமல் இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை திரைக்கதையில் இயக்குநர் இணைத்து இருந்தார்.
 
மேடை ஏறிய கலைஞர்களில் நான் மட்டுமே இதற்கு முன்னர் அரிதாரம் பூசி சில திரைப்படங்களில் நடித்த அனுபவம் உண்டு. வேறு யாரும் இதற்கு முன் மேடை ஏறியதில்லை. ஆனால் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அனைத்து மாணவர்களுக்கும் பொறுமையாகவும், நிதானமாகவும் பயிற்சி அளித்து அவர்களை தயார் செய்தார்.
 
கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைக்குமா என்ற பதட்டமும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் மாணவக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை நேர்த்தியாக நடத்திக் காட்டினர். கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறோம்.
 
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இந்த பிரம்மாண்டமான தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்