டிமிக்கி கொடுக்கும் ஆதரவாளர்கள் : அதிர்ச்சியில் அழகிரி : தள்ளிப் போகுமா பேரணி?

புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:58 IST)
அழகிரி தலைமையில் செப்.5ம் தேதி நடைபெறவுள்ள பேரணி தள்ளிப் போவதற்கு வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
அழகிரியை திமுகவில் இணைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. இது அழகிரிக்கும் புரிந்து விட்டது. எனவே, திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.
 
இந்த பேரணியில் பெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொள்ளும் பணியை அவரின் மகன் துரை தயாநிதியிடம் அழகிரி ஒப்படைத்துள்ளார். 
 
ஆனால், அவர் போன் செய்தால் பெரும்பாலானோர் எடுப்பதே இல்லையாம். எடுக்கும் சிலரும் சொல்கிறேன் தம்பி எனக்கூறி விட்டு கட் செய்து விடுகிறார்களாம். எனவே, எத்தனை பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என அழகிரியும், துரை தயாநிதியும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
 
குறிப்பாக, பேரணி விவகாரமாக அழகிரியை நேரில் வந்து சந்தித்து பேசுகிறேன் எனக் கூறிய பலரும் இதுவரை அவரை சந்திக்க வரவில்லையாம். இதனால், தான் நம்பிய அனைவரும் இதில் கலந்து கொள்வார்களா? அல்லது கம்பி நீட்டு விடுவார்களா? என்கிற சந்தேகம் அழகிரிக்கு ஏற்பட்டுள்ளதாம். 
 
போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லாமல் பேரணியை நடத்துவதை விட அதை தள்ளிப்போடலாம எனவும் அவர் தரப்பில் யோசிப்பதாக கூறப்படுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்