தோல் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வெட்பாலை!

இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘v’ வடிவத்தில்,  கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும். இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது. காய்க்குள் இருக்கும்  அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர். 
இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும். வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்து குடிநீரிலிட்டு கொடுக்கலாம். வெட்பாலைக்  காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைக்கொண்ட வெட்பாலை அரிசிக்கு செரிமானத் தொந்தரவுகளை போக்கும் திறன் உண்டு. 
 
துவர்ப்புச் சுவைமிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு. செதில் செதிலாகத் தோல்  உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை. 
 
வெட்பாலையின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம். இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும்  பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமின்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகவும்  பயன்படுத்தலாம்.
 
ஆரம்ப நிலை பல்வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து  மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும். 
 
இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல்நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துக்கள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். 
 
கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாக பயன்படுத்தலாம். இது காய்ச்சலை குறைக்கும். காய்ச்சலால்  உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும் சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் செய்கிறது.
 
வெட்பாலை எண்ணெய் தயாரிக்க: வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்றி, அதில் தேவையான நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில்  வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். இவை கருநீல நிறத்துடன் மாறிய  அதிசயத்தைப் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்