தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவசியம் தான் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியில் பக்தர்களுக்கு நிழற்குடை அமைக்க பூஜை நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய் ஒரு பிரபலமான நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. மக்கள் செல்வாக்கு அதிகமாக அவருக்கு இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கலாம்," என்று தெரிவித்தார்.
"அதிமுக ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், திமுக ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை. எனவே, நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லதே," என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "வழக்கில் சிக்கி ஜாமீன் வாங்கியிருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, கட்சி பணியை பார்க்கச் சொல்ல வேண்டும்," என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.