கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பாஜக கூட்டணியை அதிமுக விட்டு விலகியதால் மும்முனை போட்டி நிலவியது. இதன் விளைவாக, திமுக 39 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. சமீப காலமாக, பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் நேரடியாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்காமல், திமுகவுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில், சென்னை விமான நிலையத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டார். அவரை தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த வேலுமணியும் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார்.
டெல்லியில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதிமுக தலைவர்களின் டெல்லி பயணத்திற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை.