அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா உள்பட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வழங்கக்கோரி நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை கண்டித்து, டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.