டெல்லி பஞ்சாயத்து ஓவர்: இரண்டு நாட்களில் இணையப்போகும் அதிமுக அணிகள்!

வியாழன், 25 மே 2017 (10:08 IST)
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி இரு அணிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் மிகவும் ஓப்பனாக பேசுகிறார்கள்.


 
 
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு இது தான் சரியான தருணம் என திட்டமிட்ட பாஜக அதிமுகவை அதற்காக பயன்படுத்துவதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் வைத்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளும் கட்சியையும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் பெற முயற்சி செய்து வந்தது.
 
இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணிகளும் இணைவதே சரியான வழி என இபிஎஸ் அணி கூறி வருகிறது. ஆனால் இரு அணிகளும் இணைய சில நிபந்தனைகளை வைத்து ஓபிஎஸ் அணி அதற்கு தடை போட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் அதிமுகவின் இரு அணிகளுடைய வாக்குகள் சிதறாமல் பாஜகவுக்கு வேண்டும் என்பதால் மோடி இரு அணிகளும் இணைவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
 
இதனால் தான் சில தினங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணி பிரதமர் மோடியை சந்தித்தது, அதன் பின்னர் நேற்று இபிஎஸ் அணி மோடியை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது இரு அணிகளும் இணைவதற்கு மோடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த டெல்லி பஞ்சாயத்தின் காரணமாக அதிமுகவின் இரு அணிகளும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்