தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் சமயங்களில் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தது. ஆனால் அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு அதிமுக – பாஜக பிரமுகர்கள் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இந்த கூட்டணி உடைந்தது. அதை தொடர்ந்து பாஜகவை அதிமுகவும், அதிமுகவை பாஜகவும் தொடர்ந்து விமர்சித்து வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா இந்துத்வா சிந்தனைகளுடன் செயல்பட்டதாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து முன்னாள் ஆளுனரான தமிழிசை சௌந்தர்ராஜனும் அதை ஆதரித்து பேசியிருந்தார்.
சாதி, மத பேதமின்றி மக்களுக்கு தொண்டாற்றிய தலைவியை பாஜக திட்டமிட்டு மதசாயம் பூசுவதாக தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்பதை நிரூபிக்க தயார் என கூறிய அண்ணாமலை அதிமுகவினர் விவாதத்திற்கு தயாரா என அறைக்கூவல் விடுத்தார்.
மேலும் அண்ணாமலை தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் பிம்பங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின் கொள்கைகளை திரித்து அவர்களை கபளீகரம் செய்ய பாஜக முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.