டெல்டா மக்களை ஆபாசமாக திட்டிய அதிமுக எம்.பி: வலுக்கும் கண்டனங்கள்

செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:56 IST)
கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற அதிமுக எம்.பி வைத்தியலிங்கம் மக்களை ஆபாசமாக திட்டியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
பல இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கவில்லை எனவும், மீட்புப் பணிகளை செய்ய அரசு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை எனவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டியடித்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பையத்திற்கு மீட்புப் பணிகளை பார்வையிட சென்ற சென்ற அதிமுக எம்.பி வைத்தியலிங்கம், அமைச்சர் கடம்பூர் ராஜூ, செங்கோட்டையன் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.பி வைத்தியலிங்கம், மக்களை ஆபாசமாக திட்டி வசைபாடினார். தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களிடம் எப்படி பேசுவது கூட தெரியாதா என வைத்தியலிங்கத்திற்கு கடும் கண்டனங்கள் கிளம்பி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்