தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் அதிருப்தி..!

Siva

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (09:07 IST)
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகள் பலர் அதிருப்தி அடைந்தனர்.
 
60 நாட்களுக்கு முன்பு ரயில் பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்படும் நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி வரவிருக்கும் தீபாவளியையொட்டி, அக்டோபர் 17 ஆம் தேதிக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
 
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பயண சீட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான முன்பதிவு 5 நிமிடங்களிலேயே முடிந்தது.
 
இதேபோல், தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் நாகர்கோவிலுக்கு செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயில் ஆகியவற்றின் பயணச் சீட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன.
 
மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களுக்கான முன்பதிவுகளும் வேகமாக முடிவடைந்தன.
 
தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 19-க்கான ரயில் முன்பதிவு ஆகஸ்ட் 20 அன்றும், தீபாவளி நாளான அக்டோபர் 20-க்கான முன்பதிவு ஆகஸ்ட் 19 அன்றும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்