அதிமுக லெட்டர் பேடில் மோடி படம்! – பாஜகவை ஈர்க்க ஓபிஆர் முயற்சி?

வியாழன், 28 நவம்பர் 2019 (18:34 IST)
அதிமுக எம்.பியின் லெட்டர் பேடில் மோடியின் உருவப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிலிருந்து மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். பாராளுமன்றத்தில் தொடர்ந்து திமுக எம்.பிக்கள் மோடியின், மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து வரும் நிலையில் தொடர்ந்து அந்த திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருபவர் ரவீந்திரநாத்.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ரவீந்திரநாத் காவி துண்டு அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அந்த கூட்டத்தில் பேசிய அவர் ”முதலில் நான் ஒரு இந்து” என்று மதத்தை மையப்படுத்தி பேசியிருந்ததை எதிர்கட்சிகள் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தன.

தனது தந்தையும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் அமெரிக்கா சென்ற ரவீந்திரநாத் அங்கு பேசும்போது கூட “நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்” என்றே பேசியுள்ளார். ரவீந்திரநாத்தின் இந்த மோடி பாசம் அவரது லெட்டர் பேட் வரை நீண்டிருக்கிறது.

தனது லெட்டர் பேடில் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார் எம்.பி ரவீந்திரநாத். அந்த கடிதத்தின் மேல் பகுதியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது.

பிரதமரையும், பாஜகவையும் ஈர்க்கவே ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் இதுபோன்ற ஐஸ் வைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்